நேருக்குநேர் நின்று சனி பகவானை வழிபடலாமா ? தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்

 சனி பகவானின் ஆதிக்கத்தை பொறுத்தே ஆயுட்காலம் அமையும் என்பதால் ஆயுள்காரகன் என்று  சனிபகவானை   அழைக்கிறோம்.


"சனீஸ்வரனைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை" என்பது ஜோதிடப் பழமொழி.


அதனால் மக்களுக்கு சனிபகவானிடம் சற்று பயம் உண்டு என்பார்கள்.சனீஸ்வரன் அவரவர் ராசிகளில்  சஞ்சரிக்கும்போது பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் அந்தந்த  ராசிகளை கடந்து அடுத்த ராசிக்கு செல்லும்போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் மகிழ்ச்சியைக் கொடுத்து செல்வார் என்பது பழங்கால ஐதீகம்.


சனி தோஷம் உள்ளவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால், சனீஸ்வரன் மகிழ்வூட்டும் தாக்கங்களை குறைத்து பல நன்மைகளை தருவார். இவற்றுள் ஏழரைச் சனி காலம் மிகவும் கஷ்டமான காலமாகும்.


சனிபகவான் விரத வழிபாடு :

சனிக்கிழமையன்று காலையில் குளித்துவிட்டு, வீட்டில் பூஜை, மற்றும் மதிய வேளைகளில் எந்த உணவு வகைகளும் உண்ணாமல் பால், பழம், தண்ணீர் மட்டும் சாப்பிட்டு விரதம் எடுத்து கொள்ள வேண்டும்.

மாலைவேளையில்  சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அதன் பிறகு இரவு வேளையில் ஏதாவது ஒரு எளிமையான உணவை உட் கொண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

 சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் கோயிலுக்குச் சென்று, சனிபகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி, கருப்பு எள் மற்றும் வேகவைத்த சாதம் இவற்றைப் படைத்து, தீபமேற்றி வழிபட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.


சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைபிடிக்கலாம். சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.


சனிக்கிழமை விரதத்தின் பலன்கள் :

பாவங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும்.

திருமணத்தடை நீங்கும்.

சனி தோஷத்தால் ஏற்படும் துன்பத்தின் தாக்கம் குறையும்.

தோஷங்கள் மற்றும் கர்ம வினைகள் குறையும்.

சகல செல்வமும் கிடைக்கும்.



சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா என  புராணக்கதை என்ன சொல்கிறது என்று பார்ப்போம் 


நவகிரகங்களை தனது கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்தான் இலங்கை வேந்தன் ராவணன். 

இவன் சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில் படுக்க வைத்து, அவர்களின் மார்பின் மீது கால்களை வைத்து மிதித்துக்கொண்டு அரியணை ஏறும், இறங்கும் வழக்கத்தை கொண்டிருந்தான்.


இதற்காக நவகிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளில் வரிசையாக மேல்நோக்கி படுக்க வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சனி கிரகம் மட்டும் தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால் மேல் நோக்கி பார்க்காமல், கீழ் நோக்கி குப்புறப் படுத்திருந்தது.

ராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட நினைத்த நாரதர், ராவணன் சபைக்கு வந்தார். அங்கே ராவணன் நவகிரகங்களை தனது காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், "ராவணா! உனது கட்டளையை மதித்து இந்த நவகிரகங்கள் அனைவரும் மேல்நோக்கி படிக்கின்றனர். ஆனால், சனி கிரகம் மட்டும் உன்னை அவமதிக்கும் வகையில் கீழ் நோக்கிப் படுத்துஇருப்பதை பார்த்தாயா?" என்று கூற, இதனை கேட்ட ராவணனும் சனி கிரகத்தை மேல் நோக்கி படுக்க சொன்னான்.

தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் ராவணன் கேட்காததால், சனி கிரகமும் படிக்கட்டில் மேல் நோக்கியபடி திரும்பி படுத்தது. ராவணன் தனது காலால் சனி கிரகத்தை மார்பில் மிதித்து ஏறுகையில், சனி கிரகத்தின் குரூரமான பார்வை ராவணனின் மீது விழுந்தது. அப்போது முதல் ராவணனுக்கு ஏழரை சனி  ஆரம்பித்தது. அதன்பின், சில காலங்களிலேயே இராமரின் கையால் வீழ்த்தப்பட்டு மடிந்தான் இராவணன்.


நாரதரும் தான் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டார். புராணத்தில் கூறப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பதே சிறந்தது என்பதை அறியலாம்.


சனிக்கிழமைதோறும் நவகிரகம் சுற்றும் பழக்கம் உள்ளவர்கள், சனீஸ்வரனை நேருக்கு நேர் நின்று வழிபடாமல் சன்னதிகளின் இரு பக்கங்களிலும் நின்று வழிபடலாம். இவ்வாறு வழிபட்டால் சனிபகவானின் கெடு பார்வையால் நமக்கு எந்த தீங்கும் ஏற்படாது.


மேலும் ஏழரை சனி, பாதச் சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி நடைபெறும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் சனிபகவானுக்கு 27 தடவைகள் சுற்றி வந்து, ஏழரை சனி, பாதச் சனி, சனிபகவானின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.

இது போன்ற தகவல்களுக்கு நமது குமரி தோழா பக்கதினை பின்தொடரவும் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.